type in English

Sunday, October 8, 2017

The idealistic approach to international politics

சர்வதேச அரசியலுக்கான இலட்சியவாத அணுகுமுறை

ஆரம்பகால அரசியல் ஆய்வுகள் பெரும்பாலும் இலட்சிய வாதம் என்ற கண்ணோட்டத்திலே நோக்கப்பட்டது. இவ் அணுகுமுறையை கூடுதலாக பயன்படுத்தியவர் பிளேட்டோ ஆவார். இதில் இவர் கற்பனாவாத அரசு ஒன்றை வலியுறுத்துகிறார். இலட்சியவாத அணுகுமுறை என்பது ஓர் அரசு நடைமுறையில் எவ்வாறு உள்ளது? கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தது? என ஆராய்வதாகும். இதனையே ஆங்கிலத்தில் “What ought to be there OR What should be there?” என்கின்றனர். மேலும் நடைமுறையைக் கொண்டு எதிர்காலத்தை எதிர்வு கூறல் இலட்சிய வாத அணுகுமுறை ஆகும்.
இலட்சியவாதிகள், மனிதனின் நற்குணமானது கொடுங்கோன்மையற்ற சமத்துவத்துடன் கூடிய போர் இல்லாத ஒரு புதிய உலகினைக் கட்டியெழுப்பும் என உறுதியாக நம்புகின்றனர். இலட்சியவாதமானது வன்முறையற்ற, அரசியல் அதிகாரத்தில் இருந்து விடுபட்ட உறுதியான ஒரு எதிர்கால சர்வதேச அரசியலைப் படம் பிடித்துக்காட்டியது. இலட்சியவாதம், மோதல் மற்றும் போர் அற்ற உலகினை உருவாக்குவதற்க்கு சர்வதேச அமைப்பு ஒன்று கட்டளைகளை வகுக்கும் என வாதிட்டது. இலட்சியவாதிகளுல்  St. Simon, Aldous Huxley, Mahatma Gandhi மற்று Woodrow Wilson மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களின் கருத்துப்படி அறநெறியே அல்லது நல்லொழுக்கமே சர்வதேச சமாதானத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் மிக அவசியமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் எனக்கருதினர்.

சர்வதேச அரசியலைக் கற்பதற்கான இலட்சியவாத அணுகுமுறையானது இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்க அரசியலில் செல்வாக்கு செலுத்திய தாராள இலட்சிய வாதத்தின் விளைவாகும். இதன் பிரதான கர்த்தாவாக வூற்றோவில்சன் கருதப்படுவார். Condocent, Wilson, Butterfield, Burton Russell போன்ற இலட்சியவாதிகள் அரசும் சமூகமும்  படிமுறை வளர்ச்சியின் விளைவாகும் என நம்புகின்றனர். இப்படிமுறை வளர்ச்சியானது பூரணமற்ற நிலையிலிருந்து பூரணத்துவத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. இக்கட்டத்தில் தான் சமூகத்தில் சமாதனத்தையும், நீதியையும் கட்டியெழுப்பும் தேசங்களின் குடும்பத்தை தாபிப்பதன் மூலம் போர் வன்முறை, தீய ஒழுக்கம் என்பவற்றை இல்லாதொழிக்கலாம். மனித அதிகாரம் இல்லாத உலகம் மகிழ்ச்சி நிறைந்ததாகக் காணாப்படும்.
வூற்றோ வில்சனின் கருத்துப்படிஉலகம் ஜனநாயக தேசிய அரசுகளைக் கொண்ட ஒரு குடும்பமாக அமையும் போது நாடுகளிற்கிடையிலான உறவுகளில், சண்டை சச்சரவுகள் மற்றும் முரண்பாடுகள் தோற்றம் பெற வாய்புக்கள் இருக்காதுஎனக்குறிப்பிட்டார்.
பேற்றன் ரசலின் கருத்துப்படிவிஞ்ஞான யுகத்தில் போர் என்பது விரைவாகவோ அல்லது தாமதித்தோ உலக அழிவினைக் குறித்து நிற்கின்றதுஎன்றார்.
மேலும் இலட்சியவாத அணுகுமுறை சமாதனத்தினை வலியுறுத்துவதினால் ஒவ்வொருவரிலும் விட்டுக் கொடுப்பு உணர்வினை தோற்றுவிக்கின்றது. இது தொடர்பாக இமானுவேல் காண்ட் குறிப்பிடுவதாவதுஎதிர்கால மனிட வர்க்கம் சர்வலோகம் மற்றும் சமாதானத்தைக் கொண்டு சர்வதேச அரசியலில் அமைய வேண்டும்என்கிறார்.

சர்வதேச அரசியலில் இலட்சியவாத அணுகுமுறையின் செயற்பாட்டை நோக்கும் போது ஒரு சாதகமான முறையிலே உற்று நோக்குகின்றது. அந்த வகையில் சர்வதேச அரசியல் சமாதானமிக்கது என கருதுவதுடன் அரசுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் பொதுப்பாதுகாப்பு தொடர்பில் நிறுவனங்கள் மற்றும் சட்டங்களின் ஊடாக சமூக உறவுகளை பேண முடியுமென கருதுகிறது. இலட்சியவாத அணுகுமுறை இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் பண்பினை விபரிக்கின்றது.
1.   ஒழுக்க விழுமியங்கள்
2.   சட்ட நெறிமுறைகள்
இலட்சியவாதத்தின் பண்புகள் என நோக்கும் போது இதில் மனிதர்கள் அடிப்படையில் சிறந்தவர்கள் அதாவது நற்குணம் படைத்தவர் என்பது போன்று அரசுகளும் இயல்பில் அமைதியையும் சமாதானத்தையும் நேசிக்கும் ஒன்றாகும் எனக் கருதுகிறது. போர் மற்றும் வன்முறையை குறைத்து அல்லது முற்றிலும் இல்லாதொழித்து ஒத்துழைப்பினையும் சமாதனத்தையும் விரும்புகிறது. சர்வாதிகாரத்தினை முற்றிலுமாக வெறுக்கின்றது. சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச சங்கங்கள் போன்ற சட்ட முறையான அம்சங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது. மனித உரிமைகள் போன்ற நீதியான விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. உலக அரசாங்கத்தை உருவாக்குவதையே தனது இலக்காக கொண்டுள்ளது.
இலட்சிய வாதிகள் ஒரு தேசத்தில் உள்ள அனைத்து மனிதர்கள் அல்லது பெரும்பாலான மனிதர்கள் இயல்பாகவோ அல்லது உள்ளார்ந்த ரீதியாகவோ அரசை ஏற்றுக் கொள்வதை மறுக்கின்றனர். மாறாக மனிதர்களும் அவர்களது நாடுகளும் கூட்டுறவுடன் செயற்படுவதனால் மிகக் குறைந்தளவிலான முரண்பாட்டு உறவுகளையே கொண்டுள்ளன என இலட்சியவாதிகள் நம்புவதற்கு பழக்கப்பட்டுள்ளனர். மனித இயல்பு அடிப்படையில் நல்லது. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதுடன், சிறந்த காரியங்களையும் புரிகின்றனர். இவ்வுணர்வு சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றது. ரூசோவும் தனது சமூக ஒப்பந்தக் கோட்பாட்டினூடாக இக்கருத்தினை ஏற்றுக் கொண்டார். மனிதர் சிறிய சமூகத்துடன் இணைந்து பின்னிப்பிணைந்து காணப்படுவதற்கு காரணம் வளங்களை பகிர்ந்துக் கொடுப்பதில் உள்ள தடை அல்லது சிக்கல் தன்மையே ஆகும்.
ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில் குறிப்பிட்டிருந்தது போன்று இலட்சியவாதிகளும் மனிதர்கள் சிவில் சமூகத்துடன் ஒன்றினைந்தவர்களாக காணப்பட்டனர் என்றும் நிகழ்கால மற்றும் எதிர் காலங்களில் மக்கள் கூட்டுறவையும் அமைதியான உலக சமாதானத்தையும் கட்டியெழுப்புவதற்காக ஒன்றினைவர் என்று நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். மோசமான மனிதர்களின் செயற்பாடுகளும் மோசமான சூழல் மற்றும் நிறுவனங்களின் விளைவு, அது கெட்ட செயலை தூண்டுவதுடன் போர் ஏற்பட காரணமாகின்றது. இத்தகைய போர்கள் சர்வதேச உறவுகளை பாதிப்படையச் செய்யும். போரை ஊக்குவிக்கும் சர்வதேச ஒழுங்குகளை இல்லாதொழிப்பதிலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலவலாவிய முயற்சிகளை எடுபதிலும் கவனம் செலுத்துவதுடன் சர்வதேச அமைதி, சட்டம் போன்றவற்றை பேணிப்பாதுகாக்க அக்கடப்பாட்டைக் கொண்ட சர்வதேச நிறுவனங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.
                       
இலட்சியவாத அணுகுமுறை திறந்த, சுதந்திரமான பொருளாதார முறையினை வலியுறுத்துகிறது. இதனால் அரசுகள் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் போது மற்றைய அரசுகளுக்கு எதிராக செயற்படுவதில் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்பதாலேயாகும். இன்று Global Super Power ஆக ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஜப்பான் காணப்பட்ட போதிலும் இவையிரண்டும் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றது. அதே போன்று அமெரிக்கா சீனாவின் உற்பத்திகளை இறக்குமதி செய்து உள்நாட்டினுள் விற்பனை செய்து கொள்கின்றது.
இத்திறந்த பொருளாதர முறை யுத்தத்தினை கட்டுப்படுத்தும் என்பதற்கு சிறந்த உதாரணம் அண்மைகாலத்தில் நிகழ்ந்த சீனா பிலிப்பைன் சம்பவம் குறிப்பிடத்தக்கது. தென் சீனக் கடலின் ஆதிக்கத்தினைப் பெற்றும் கொள்ளும் பொருட்டு பிலிப்பைன் அமெரிக்காவின் ஆதரவுடன் சீனாவிற்க்கு மிக அருகில் ஒரு யுத்தக் கப்பலை நிறுத்தி வைத்திருந்தது. சீனாவும் இதற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபடும் என்பதையே பெரும்பாலான உலகநாடுகள் எதிர்பார்த்திருந்தது. ஆனால் சீனா அவ்வாறு யுத்தத்தில் ஈடுபட முன்வரவில்லை. சீனா பிலிபைன்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தென் சீனக் கடல் பிராந்தியம் தனக்கு சொந்தமானது எனக்கூறி அக்கப்பலை அகற்றுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் பிலிப்பைன்ஸ் அதனை நிராகரித்தது. இதற்காக சீனா யுத்தப்பிரகடனம் செய்யாது பிலிப்பைன்சிலிருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யும் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டது. இதனால் பிலிப்பைன்சிற்கு பாரிய பொருளாதார இலப்பு ஏற்பட்டது. ஏன்னெனில் சீனாவே பிலிப்பைன்சின் 90% மான வாழைப்பழங்களினை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் இது சீனாவின் வாழைப்பழ இறக்குமதியில் 2 சதவீதமே ஆகும். எனவே இத்திறந்த பொருளாதார முறை போரினை நிறுத்துவதற்கான ஒரு உத்தியாகும்.
இவ்வணுகுமுறை ஒழுக்கவியலை வலியுறுத்துகின்றது. அரசுகள் தமது உறவுகளின் அடிப்படையில் அமைதல் வேண்டும். அத்துடன் ஒழுக்கவிழுமியங்களை நிலைநிறுத்த வேண்டும். இது கற்பனாவாதமன்று
நவைலட்சியவாதிகள் இறைமை அரசுகளுக்கிடையிலான போட்டி நிலைமைகளே உலக முறைகளின் குழப்பமான தன்மைக்கு காரணம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். லட்சியவாதிகளும் நவைலட்சியவாதிகளும் உலக முறைமையின் குழப்பமான தன்மைக்கு முக்கிய காரணம் சர்வதேச முறைப்பாடுகள் என்று கூறுகின்றனர். மேலும் மனிதர்கள் ஒத்துழைப்புடன் செயல்படும் போது  பொதுப்படையான பண்புகளைப் பெற்றுக் கொள்ளலா. மேலும் இவ் ஒத்துழைப்புக்கான சிறந்த வழி பயனளிக்கக் கூடிய சர்வதேச ஒழுங்கமைப்புக்களைக் கட்டியெழுப்புவதாகும் என்கின்றனர்.
இலட்சியவாதத்தின் தன்மையினை நோக்கும் போது இதில் நீதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதினை அவதானிக்கலாம். அந்தவகையில் அதிகார அரசியல் மோசமான ஒழுக்கம், வன்முறை என்பவற்றிலிருந்து விடுபட்டு சீர்திருத்தமான சர்வதேசமுறைமை என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டிய எதிர்கால சமூகம் பற்றி வலியுறுத்துகின்றது. இலட்சியவாதமானது சில எடுகோளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது.
1.   மனித இயல்பு நன்மையாலும் பொதுநலன் பரஸ்பரம் உதவுதல், ஒத்தியங்கும் தன்மை போன்றவற்றை கொண்டது.
  2.   ஏனையோர் நலனைப்பேணும் மனிதனின் இரக்கசுபாவம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
 3.   போரென்பது சர்வதேச முறைமையில் மோசமான வெளிப்பாடாகும்.
  4.   போர் தவிர்க்கப்படக் கூடியதாகும்.
 5.   சர்வதேச சமூகம் போரை உருவாக்கக் கூடிய நிறுவனங்களை ஒழிக்கவேண்டும்.
இலட்சியவாதிகள் அதிகாரத்தை பிரயோகித்தல் பாதுகாத்தல், அபிவிருத்தி செய்தல் என்பவை சர்வதேச அரசியலின்சாரம் என்பதை மறுக்கிறார். அதிகாரத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதற்கு மாறாக வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் ஒத்துழைப்பு விதிகளாக அமைய வேண்டும் என்கின்றனர். அதன் அடிப்படையில் இலட்சியவாதமானது ஒழுக்கம், நீதியை வலியுறுத்துகின்றது. சர்வதேச சட்டம் மற்றும் ஒழுக்கவிழுமியங்களே சர்வதேச நிகழ்வுகளின் அடிப்படையில் செலாவாக்கு செலுத்துகின்றது. இலட்சியவாதிகளின் கருத்துப்படிமனித இயல்பு அடிப்படையில் மிகவும் நல்லது மன்னன் நல்ல வழக்கங்களை பின்பற்றுவனாக காணப்படுகிறான். உதாரணமாக தேசங்களுக்கிடையிலான அரசில் கொடுக்கல் வாங்கல்களின் உண்மைபேசுதலைக் குறிப்பிடலாம். இலட்சியவாதிகள் தேசங்களை ஒரு சமுதாயமாக கருதும் அதேவேளை அவை ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து மீட்சி பெறும் செயற்றிறனை உடையதாகவே உலகினைக் காண்கின்றனர்.
சர்வதேச சமூகம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது சம்பந்தமாக பல ஆலோசணைகளை இலட்சியவாதிகள் முன்வைக்கின்றனர்.
 Ø  சர்வதேச ஒழுக்கத்தை மேம்படுத்தல். ஒழுக்க  ரீதியான தேசங்கள் தமது சர்வதேச நடத்தைகள் ஒழுக்கக் கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும். சகலவகையான பாரம்பரிய அதிகார அரசியலையும் தவிர்க்க வேண்டும். பிரிவினைவாத கொள்கையை கடைபிடிக்கக் கூடாது. இவ்வாறு செயற்படின் அதிகார அரசியலின் மோசமான விளைவுகளை படிப்படியாகக் குறைக்கலாம்.
Ø  உலக அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதில் அக்கறைக்காட்டல். அரசுகளுக்கிடையிலான போட்டி தன்மையும் போர்புரியும் சுபாவத்தையும் பிரதியீடு செய்வதற்கு உயர்தேச நிறுவனத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும் சமாதான அரச்சியல் முறை எனும் வகையில் ஓர் உலக அரசாங்கத்தை உருவாக்கல், சமூக விவகாரங்களின் சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தல் என்பன போர் பற்றிய பிரச்சினையை தீர்க்க இலட்சியவாதிகள் முன்வைத்த ஆலோசனைகளாகும். ஓர் உலக அரசாங்கத்தை தாபிப்பதன் மூலமே அதிகார அரசியலை இல்லாதொழிக்கலாம் என இலட்சியவாதிகள் குறிப்பிடுகின்றனர்.
Ø  போர்பற்றிய சட்டத்தினை அறிமுகம் செய்வதினூடாக போரை தவிர்கலாம். போரை ஆரம்பித்தல், அதை நிகழச்செய்தல், கோர விளைவுகளை தவிர்த்தல் இதன் மூலம் மேற்கொள்ளப்படலாம்.

Ø  சமாதானமான ஓர் உலகைக் கட்டியெழுப்ப சகலவிதமான அணைத்தான்மை சக்தியையும் ஒழிக்கவேண்டும். அனைத்தான்மை என்பது போரேற்பட  பிரதானமாக காரணி அது இல்லாமலாக்கப்பட  வேண்டும் என்கின்றனர்.

  Ø  சர்வதேச வர்த்தக தடையை அகற்றுதல் மற்றும் சுயநிர்ணயக் கொள்கையை ஏற்படுத்துவதன் மூலமும் சமாதான உலகை உருவாக்க உதவும் என்கின்றனர்.
போன்றனவையே இலட்சியவாதிகளின் ஆலோசனைகளாகும்.
மனித நேயத்தால் கட்டாயமாக உலக ஒழுங்கிற்கான புதிய முறைமையை கண்டு கொள்ளலாம் என இலட்சியவாதிகள் நம்புகின்றனர். இவர்கள் இறைமையை அடிப்படையாகக் கொண்ட உலகமுறையின் மூலம் ஆறுதலடைய மாட்டார்கள். ஆனால் புதிய நிறுவன ரீதியான வழியைக் கண்டுபிடிப்பதன் மூலமே ஒத்துழைப்பினை ஏற்படுத்த முடியும் என்கிறார். அனுஆயுதப்பரம்பல், நாடுகள் மற்றைய நாடுகளின் பொருளாதார ரீதியாக தங்கியிருக்கும் நிலையில் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தி உலக வளங்கள் அருகி வரல், செல்வத்துக்கும், வறுமைக்குமிடையான இடைவெளியை அதிகரித்தல் போன்ற விடயங்களில் மனிதன் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்பட கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதன் காரணம் இவை பயங்கரமான அழிவினை எதிர் நோக்கும் என்பதாலாகும்.
இலட்சியவாதிகளில் சிலர், மனிதர்கள் தமது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் ஒத்துழைப்புடன் கூடிய சமூகத்தை அமைக்க கற்றுக் கொள்ள வேண்டும். எனவே அரசுகளும் தனது தனித்துவத்தை இழக்கவிடாது ஒத்துழைப்புடன் செயற்பட கற்றுக் கொள்ளலாம். மேலும் சர்வதேச ரீதியாக பொருளாதாரத்தில் தங்கிவாழும் நிலையின் வளர்ச்சி உலகநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான ஆர்வத்தை நாடுகளுக்கிடையே உருவாக்கும். மேலும் சில இலட்சியவாதிகள் நாடுகள் முழுமையான இறைமையை வைத்திருக்கிறது என்பதில் சந்தேகம் கொண்டு காணப்படுகின்றனர். நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள அந்நாடுகளின் இறைமையில் சிலவற்றை சர்வதேச ஒழுங்கமைப்புக்கு விட்டுகொடுக்க வேண்டும் என்கின்றார். இதன் மூலம் நன்னடத்தைகளை நடைமுறைக்கு கொண்டு வரலாம்.
இவ்வாறு இருந்த போதிலும் இவ் இலட்சியவாத அணுகுமுறையில் ஒருசில குறைபாடுகள் உள்ளன. இதன் முக்கிய பலவீனம் இலட்சியவாதிகள் தமது முடிவுகளை நிறுபிக்க முடியாத இலட்சியங்களின் மீது நிறுவியுள்ளமையால் அது சாத்தியப்பாடு அற்றதாக உள்ளது. இது யதார்த்தத்திற்கு தூரமானது. யதார்த்தத்திலிருந்து விடுபட்டு கற்பனாவாத சிந்தனையில் சிந்திப்பதனால் இயல்பு வாழ்க்கையின் அடிப்படைகள் பாதிக்கப்படுகின்றது. தேசிய நலனின் முக்கியத்துவம் இம்முறையில் குறைந்தே காணப்படுகின்றது. அதிகாரத்திற்கான போராட்டம் ஒன்று காணப்படாமையினால் இவ் அணூகுமுறையில் தவறுகளை தட்டிக் கேட்கவும், விமர்சிக்கவும் வாய்புகள் கிடையாது.
இலட்சியவாதம் இவ்வாறான இயல்புகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருக்கும் போது இலட்சியவாதத்தினைப் போன்றே மரபு ரீதியான அணுகுமுறைகளுள் ஒன்றான யதார்த்தவாத அணுகுமுறையின் தன்மையினையும் செயற்பாட்டினை இனி விரிவாக ஆராய்வோம். Continue..

Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science 
University of Peradeniya


Reference....
கணேசலிங்கம்கேரீ. (2010) சர்வதேச அரசியல் சில பார்வைகள், கொழும்பு – 11 : சேமமடு பதிப்பகம்.

தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் (2010) அரசியல் விஞ்ஞானம் : அரசியல் செயற்பாடும்அரச்சியல் செயல்முறையும்கொழும்பு - 11: சேமமடு பதிப்பகம்.

Robert M.A. Crawford, (2000) Idealism and Realism in International Relations, London  :  Routledge

http://www.zeepedia.com/read.php%3Fapproaches_to_international_relations_traditional_approach_international_relations_ir%26b%3D100%26c%3D3


http://www.yourarticlelibrary.com/category/international-politics/

No comments:

Post a Comment

NATO

நேட்டோவின் தோற்றம் மற்றும் வளர்ச்சி   நேட்டோ அரசு சார் பிராந்திய அமைப்பாகும் . 4 ஏப்ரல் 1949 ஆம் ஆண்டு இரு வட அமெரிக்க மற்றும...