type in English

Sunday, October 8, 2017

Realistic approach to international politics

சர்வதேச அரசியலுக்கான யதார்த்தவாத அணுகுமுறை

யதார்த்தவாத அணுகுமுறையானது சர்வதேச அரசியலைப் பொறுத்தமட்டில் முக்கியமானதொரு அணுகுமுறையாகும். இது யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு யதார்த்த சூழலில் நின்று சர்வதேச அரசியலை விளக்க முற்படுகிறது. இவ் அணுகுமுறை பாதுகாப்பு மற்றும் அதிகாரம் என்ற இரு சக்கரங்களினால் சுழல்கிறது. தோமஸ் ஹொப்ஸ், கௌடில்லியன் மற்றும் மக்கியவல்லியின் உத்வேகத்துடன், 20 ஆம் நூற்றாண்டில் முன்னனிவகித்த யதார்த்தவாதிகளான  George Kennan மற்றும் Hans Morgenthau போன்றோர் சர்வதேச அரசியல் அல்லது உறவுகளின் கருப்பொருள் அதிகாரத்திற்கான போராட்டாமே என வாதிட்டனர்.

யதார்த்தவாதிகள் யதார்த்தமிக்க சர்வதேச அரசியலை நம்புவதுடன் அதனை புறக்கணித்து சர்வதேச அரசியலை விளக்க முடியாது என்கின்றனர். இவ்வணுகுமுறையானது 18 – 19 ஆம் நூற்றாண்டின் அணுகுமுறையாக இருப்பினும் சர்வதேச அரசியலின் கண்நோக்கில் இதன் பிரபல்யம் மற்றும் செல்வாக்கு 2ம் உலகப் போரின் பின்னரே உணரப்பட்டது. Hans Morgenthau இவ் அணுகுமுறையின் பிரதான ஆதரவாளாராவார்.
யதார்த்தவாத அணுகுமுறை, இலட்சியவாத அணுகுமுறைக்கு எதிரான வகையிலேயே காணப்படுகின்றது. அந்தவகையில் யதார்த்தவாத அணுகுமுறை இலட்சியவாதத்தினைப் போன்று முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட கருதுக்களையோ அல்லது நிகழ்வுகளையோ ஆதாரமாகக் கொள்வதில்லை. இக் கோட்பாடு ஆட்சியாளர்கள் அதிகாரமே சர்வதேச அரசியலில் இடம்பெறும் பிரதான காரணி என்றும் ஒவ்வொரு அரசும் தனது இலக்கினை அடைய எவ்வழிமுறைகளயும் பயன்படுத்துகின்றது என்றும் ஏற்றுக் கொள்கின்றது. மறுவார்த்தையில் கூறின் இவ்வணுகுமுறை சர்வதேச அரசியலானது அதிகாரத்திற்கான போராட்டமே எனக்குறிப்பிடுகின்றது.

மொகந்தோ தான் எழுதியநாடுகளுக்கிடையிலான அரசியல்என்ற நூலில்நலன், அதிகாரம் என்பன சர்வதேச அரசியலை ஒழுங்குபடுத்தும் பிரதான எண்ணக்கருக்களும் நியமங்களும் ஆகும்என வாதிட்டிருந்தார். இவற்றை அனுசரித்து செயற்படும் அரசுகள் இயல்பாகவே ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன என்றவகையில் இம் இரண்டு காரணிகளையும் யதார்த்தவாத அணுகுமுறையென அழைகிறது.

அடிக்கடி முரண்படும் தேசிய நலன்களை பாதுகாப்பதற்காக தேசங்களுக்கிடையே இடம்பெறும் போராட்டம் என்பதே யதார்த்தவாதிகளது கருத்தாகக் காணப்படுகிறது. யதார்த்தவாதிகள் அரசானது பிரஜைகட்கு நல்லது செய்தல் வேண்டும் என்பதே எல்லா ஒழுக்கங்களை விட உயர்வானது என்கின்றனர். இதற்கு அதிகாரமே  மிகவும் அத்தியவசியமானது என்கின்றனர். அந்தவகையில் அரசுகளுக்கிடையிலான அதிகாரப்போராட்டம் ஒரு நிரந்தரமாக இருப்பதுடன், சர்வதேச அரசியலின் இலக்குகள் மற்றும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் தொடர்பில் யதார்த்தவாதம் அதிகளவு கவனம் செலுத்துவதில்லை.
யதார்த்தவாத அணுகுமுறையின் எடுகோள்கள் எனப்பார்க்கும் போது இதில் மனிதர்கள் எப்போதும் சுயநலம் மிக்கவர்கள் எனவும் அதிகாரத்திற்கான பேராசை மற்றும் ஏனையவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் மனநிலை மனித இயல்பின் பிரதான அம்சமாகும் எனவும் கருதப்படுகின்றது. அந்தவகையில் தோமஸ் ஹொப்ஸ் தனது சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில் இயற்கை நிலையில் மனிதன் எத்தகைய தன்மையை கொண்டிருந்தான் எனக்குறிப்பிட்டாரோ அதனை யதார்த்தவாதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சர்வதேச அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் எனவும் ஒவ்வொரு நாடும் தனது தேசிய நலனை அடைந்து கொள்ள அதிகாரத்தை பயன்படுத்துகிறது எனவும் சர்வதேச அரசியலின் அடிப்படை பண்பு சுய பாதுகாப்பாகும் என யதார்த்தவாதிகள் கருதுகின்றனர். ஓர் அரசு சுய பாதுகாப்பை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்க கூடாது. தேசிய நலனை முன்னேற்றும் போது எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டிவரும் போது எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டி வரும் போது பாதுகப்பு தயார்நிலைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என குறிப்பிடுகின்றது.
சமாதானத்தை வலுச்சமநிலை, கூட்டுப் பாதுகாப்பு, உலக அரசாங்கம், ராஜதந்திரம், கூட்டனி போன்ற அதிகாரத்தை முகாமை செய்யும் பொறிமுறைகளின் ஊடாக மட்டுமே பேணல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. நட்பு நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதன் மூலம் சுயபாதுகாப்பு திறனை அதிகரித்துக் கொள்ளும் அதே வேளை ஒரு அரசு அதன் நட்பு அரசுகளின் மீது சுயபாதுகாப்பிற்காக தங்கியிருக்கக் கூடாது என யதார்த்தவாதம் வலியுறுத்துகிறது.
யதார்த்தவத அணுகுமுறையின் பண்புகள் எனப்பார்கும் போது இது நடைமுறை அரசியலை அடிப்படையாகக் கொண்டதாகவும் போட்டா போட்டி, முரண்பாடுகள், அதிகாரத்திற்கான போராட்டம் என்பவை இயல்பான விடயங்கள் எனவும் கருதுகின்றது. இவ் அணுகுமுறை இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி நிற்கின்றது. இவ் இராஜதந்திரத்தின் மூலம் சர்வதேச உறவுகளை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என யதார்தவாதிகள் கருதுகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம் இலங்கையில் 2015 ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னர் அதாவது மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இலங்கை சீனாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சீனாவுடன் இருக்கும் அனைத்து உறவுகளும் துண்டிக்கப்படும் எனக்குறிபிட்டார். ஆனால் இதற்கு சீனா அவ்வாறு உறவினை துண்டித்துக் கொள்வதாயின் இலங்கைக்காக அதன் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தான் செலவு செய்த மொத்த பணத்தையும் திருப்பி தருமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் இலங்கையோ அத்தகைய பாரிய பணத்தை கொடுக்கும் அளவிற்கு பொருளாதார ரீதியில் முன்னிலையில் இல்லை என்பது நாம் எல்லோரும் அறிந்தவிடயம் இத்தகைய இராஜதந்திரமான முறையினைப் பின்பற்றி சீனா தொடர்ந்தும் இலங்கையுடன் தொடர்பு வைத்துள்ளது.
யதார்த்தவாத அணுகுமுறையில் கருத்தியலுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுகப்படுவதில்லை. இது பகுத்தறிவினை அடிப்படையாகக் கொண்டது. தேசிய நலனின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டுள்ளது.
யதார்த்தவாதமானது நடைமுறை சாத்தியம் மிக்கதாக உள்ளமையினால் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைய்ம் நடைமுறையில் இருந்து பெறக்கூடியதாகவுள்ளது. இதனால் அனைவராளும் ஏற்றுக்கொள்ளக் கூடியவொன்றாகவும் அமைகின்றது. பகுத்தறிவின் மூலம் ஆராய்வதனால் அதிக தேடல்களைக் கொண்டு காணப்படுகிறது. தேசிய நலனில் முக்கியத்துவம் காட்டப்படுவதால் கூட்டுமுயற்சியை ஆதரிப்பதுடன் தேசிய ஐக்கியத்தை உறுதி செய்கின்றது. அத்துடன் இலட்சியவாதத்தினைப் போன்றல்லாது முடிவுகளை உடனுக்குடன் நிரூபிக்கக் கூடியதாகவுள்ளது.
யதார்த்தவாதம் மேற்கூறப்பட்ட நல்ல பண்புகளைக் கொண்டு காணப்பட்ட போதிலும் இதில் காணப்படும் ஒருசில குறைகள் காரணமாக பல விமர்சனங்களுக்கு உட்பட்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது. அந்தவகையில் இவ் அணுகுமுறை அதிகாரத்தினை அடிப்படையாக கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளமையினால் தேசங்களுக்கிடையிலான முரண்பாடுகள், மோதல்கள் வழமையானதாகக் காணப்படும். இது வன்முறையை தூண்டும் முறையாகக் காணப்படும். அத்துடன் அதிகார அரசியலின் நிலையான தன்மைக்கு வழிவகுக்கும். அத்துடன் இது அரசியலுடன் தொடர்பற்ற உறவுகளை புறக்கணிக்கின்றது.
இது ஒருபக்கக் கோட்பாடாகவேயுள்ளது. அதாவது அதிகாரம் என்ற காரணிக்கு  மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்துப் பார்கிறது. அதிகார உறவோடு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருப்பதால் தேசங்களை ஐக்கியப்படுத்தும் மற்றும் பிளவுபடுத்தும் இலட்சியங்களையும் விழுமியங்களையும் அலட்சியப்படுத்துகின்றது.

இலட்சியவாதம் ஒழுக்கங்களைக் கற்பிக்கும் போது யதார்த்தவாத அணுகுமுறையானது மனிதனின் கோப உணர்வு, சுயநலம், கொடூரத்தன்மை ஆகியப் பண்புகளை தூண்டுபவையாக அமைகின்றது. அத்துடன் இலட்சியவாதம் நாடுகளுக்கிடையில் போர் ஏற்படுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகளை முன்வைக்கும் போது யதார்த்தவாதிகள் நட்பு நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்து போர் புரிதலையே அதிகம் விரும்புகின்றனர்.
யதார்த்தவாதம் தேசிய நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்படுவதினால் இதன் மூலம் சர்வதேச நலனில் பங்கம் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. அத்தோடு இது தேசங்களின் சர்வாதிகாரப்போக்கினை நிலைநிறுத்தும் ஒன்றாக காணப்படுகின்றது.
இந்தவகையில் இலட்சியவாத அணுகுமுறைக்கும் யதார்த்தவாத அணுகுமுறைக்கும் இடையில் காணப்படுகின்ற ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்து கொள்ளலாம். சுடுக்கமாக கூறுகையில் இலட்சியவாதம் ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடித்து சர்வதேச அரசியலில் உறவுகளை பேண வழிவகுக்கும் போது யதார்த்தவாத அணுகுமுறையானது அதிகரத்திற்கான போராட்டத்தினூடாக சர்வதேச உறவுகளை நிர்ணயிற்க முற்படுகின்றது.


Posted by


Thiviya Mihirangani BA (Hons) Political Science 

University of Peradeniya

Reference....
கணேசலிங்கம். கே, ரீ. (2010) சர்வதேச அரசியல் சில பார்வைகள், கொழும்பு – 11 : சேமமடு பதிப்பகம்.

தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் (2010) அரசியல் விஞ்ஞானம் : அரசியல் செயற்பாடும், அரச்சியல் செயல்முறையும், கொழும்பு - 11: சேமமடு பதிப்பகம்.

Robert M.A. Crawford, (2000) Idealism and Realism in International Relations, London  :  Routledge

http://www.zeepedia.com/read.php%3Fapproaches_to_international_relations_traditional_approach_international_relations_ir%26b%3D100%26c%3D3

http://www.yourarticlelibrary.com/category/international-politics/

No comments:

Post a Comment

NATO

நேட்டோவின் தோற்றம் மற்றும் வளர்ச்சி   நேட்டோ அரசு சார் பிராந்திய அமைப்பாகும் . 4 ஏப்ரல் 1949 ஆம் ஆண்டு இரு வட அமெரிக்க மற்றும...