சர்வதேச அரசியல் பற்றிய அறிமுகம்
சர்வதேச அரசியல் என்பது பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டது. அந்தவகையில் சர்வதேச உறவுகள், சர்வதேச தொடர்புகள், பன்னாட்டு அரசியல், உலக அரசியல், உலக விவகாரம் போன்ற பல பெயர்கள் கொண்டு சர்வதேச அரசியல் அழைக்கப்படுகின்றது. இதனை தேசங்களுக்கு இடையிலான உறவுகள், முரண்பாடுகள், அரசுகள் ஒன்றிணைந்து செயற்படுத்தும் சர்வதேச அமைப்புக்கள், சட்டங்கள் என்பவற்றை உள்ளடக்கிய ஒன்று எனலாம்.
சர்தேச அரசியலை ஒரு சில அறிஞர்கள் அரசுகளுக்கு இடையிலான உறவுகளும் செயற்பாடுகளும் எனக்குறிப்பிடுகின்றனர். மற்றுமொரு சிலர் அரசாங்கங்களுக்கிடையிலான உறவே சர்வதேச அரசியல் எனக்குறிப்பிடுகின்றனர். சர்வதேச அரசியல் தொடர்பாக ஹான்ஸ் ஜே. மோர்கென்தோ கூறுகையில் “அரசுகளுக்கிடையில் அதிகாரத்தினைப் பயன்படுத்தி நடாத்தப்படுகின்ற போராட்டம்” என்று கூறுகின்றார். ஸ்பிரவுட், ஸ்பிரவுட் (Sprout and Sprout) சர்வதேச அரசியல் என்பது “சுதந்திரமான அரசியல் சமுதாயங்களிற்கிடையில் நிகழும் உறவுகளும் உளத் தொடர்புகளுமாகும். இதில் எதிர்பார்ப்புக்கள், கட்டுப்பாடுகள், மோதல்கள் என்பன தத்தமது நலன்களிற்காக ஏற்படுகின்றன” என்று கூறுகின்றார். பிலிக்ஸ் குறோஸ் (Feliks Gross) என்பவர் “சர்வதேச அரசியல் என்பது பிரதேசத்தில் பிரச்சினைகளிற்கான தீர்வினைக் காணுதல், எதிர்காலத்திட்டம், கொள்கைகள், பெறுமதிகள் சித்தாந்தம், போன்றவற்றின் செயற்பாட்டுக்கான தகுந்த பதமாகலாம்” எனக் கூறுகின்றார்.
சர்வதேச அரசியல் என்பது அரசாங்கங்களிற்கிடையிலான உறவு எனக் கூறப்படுமாயின் அரசாங்கங்களின் மாற்றங்களிற்கான சூழ்நிலை பற்றி அவதானிக்க வேண்டும். ஏனெனில் எந்தவொரு அரசாங்கமும் அரசாட்சியில் தனியுடமை அதிகாரத்தினைப் பெற்றுவிடுவதில்லை. அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் ஏனைய குழுக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. இதனால் அதிகாரத்தினை ஏனைய குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அரசாங்கத்தின் அதிகாரம் சமுதாயத்தின் எல்லாக் குழுக்களிலும் பிரதிபலிப்பதில்லை. பதிலாக எல்லாக் குழுக்களினதும் பொது அழுத்தம் என்பதே அரசாங்கத்தின் மீது பிரதிபலித்து நிற்கின்றது. எனவே சர்வதேச அரசியல் நடத்தையில் அரசாங்கமானது தனது அதிகாரத்தினூடாகப் பொது இலக்கினை அடைவதையே முதன்மைப்படுத்துகின்றது. பொருளாரத்தினையும் ஏனைய சர்வதேச விவகாரங்களினையும் அடிப்படையாகக் கொண்டு அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையினைத் தீர்மானிக்கின்ற போது அது சர்வதேச அரசியல் நடத்தையாகின்றது. இதனுடன் இணைந்து அதிகார அரசியலும் தோன்றி விடுகின்றது. அதிகார அரசியல் நடத்தையானது சர்வதேச மோதல்களிற்குக் காரணமாகின்றது. சர்வதேச மோதல்கள் ஏற்படுகின்ற போது சர்வதேச அரசுகள் யுத்தத்திற்கு போவதும் பின்னர் சமாதானத்தினை ஏற்படுத்திக் கொள்வதும் நிகழ்கின்றன.
ஒவ்வொரு அரசும் சர்வதேச அரசியல் நடத்தையில் ஈடுபடும் போது ஏனைய அரசுகளின் அதிகாரத்திற்கு சமனாக அல்ல மேலாக தனது அதிகாரத்தினைப் பேணிக் கொள்ள முயற்சிக்கின்றன. எனவே அதிகாரப் போட்டி என்பது சர்வதேச அரசியலில் தவிர்க்க முடியாததாகின்றது. சர்வதேச அரசியல் என்பதை அரசுகளுக்கிடையில் நிகழும் அதிகாரத்திற்கான போராட்டம் எனலாம். இவ்வாறு சர்வதேச அரசியலிலுள்ள பல பகுதிகளை இலகுவாக கற்கவேண்டியே பல அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Continue..
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
No comments:
Post a Comment