type in English

Monday, September 25, 2017

Role of UN Security Council in maintaining international Peace and Security

சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பை பேணுவதில் பாதுகப்புச்சபை

உலக சமாதனம், மக்களின் உரிமை, நாடுகளுக்கிடையிலான நல்லுறவு, நாடுகளுக்கிடையிலான சமூக, பொருளாதார ஒத்துழைப்பு, சமூக அபிவிருத்தி என்பவற்றை நோக்கங்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச தொடர்புகளை பேணுவதிலும் உலகம் பூராகவும் அமைதியை பேணுவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றது. போர்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், படைக்கலம் ஒழிப்பு, பொருளாதார சமூக முன்னேற்றம், சர்வதேச அபிவிருத்தி, மனித உரிமை நடவடிக்கை, குடியேற்ற ஆதிக்கத்தை அகற்றுதல் என பல்வேறு செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பாரிய பொறுப்புக்களை நிறைவேற்றும் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை காணப்படுகின்றது.

அந்தவகையில் ஐ.நா சபை சர்வதேச அமைதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சர்வதேச தொடர்புகள் ஊடாக இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகள் பல வெற்றியளித்துள்ளன. 1946ல் ஈரான் நாட்டின் வட எல்லையிலிருந்து ரஷ்யப்படைகளை விலகச்செய்தமை சிரியாவில் இருந்தும் லெபனானில் இருந்தும் பிரிட்டிஷ்-பிரன்சுப்படைகளை விலகச்செய்தமை, 1988ல் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப்படைகளைத் திரும்ப பெற செய்தமை. கிரேக்க நாட்டின் எல்லைகளில் பொதுவுடமை ஆதிக்கம் பரவாமல் தடுத்தமை போன்ற நடவடிக்கைகள் ஐ. நாவிற்கு வெற்றி ஈட்டிக்கொடுத்தன. 1991 ஆம் ஆண்டில் யுகொஸ்லாவாக்கியா மீது ஆயுதத்தடையை விதித்து அமைதி நிலைப்பாட்டை ஏற்படுத்தியமை, 1992ல் லிபியாவிற்கு எதிராக ஏற்றுமதிதடையை விதித்தமை, 2002ம் ஆண்டு இந்தோனேசியாவின் பிடியில் இருந்து கிழக்குத் தீமோரையும் 2007ல் சேர்பியாவின் பிடியிலிருந்து கொசோவாவையும் சுதந்திர நாடுகளாக அங்கிகரித்தமை, 1956ல் சூயஸ்கால்வாய் பிரச்சனையை முடிவுக்குக் கொணர்ந்து அதை அனைத்து நாடுகளின் பயன்பாட்டிற்குப் பொதுவாக்கியமை போன்ற செயற்பாடுகள் உலக சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஐ.நா வின் பாதுகாப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.



ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபையில் உள்ள வீட்டோ அதிகாரத்தை தனி ஒரு நாட்டிற்கு மாத்திரம் வழங்காமல் 5 நாடுகளுக்கு வழங்கியுள்ளமை என்பதும் ஒரு வகையில் நல்லதற்கு என்றே கூறலாம். ஏனெனில் இவ் வீட்டோ அதிகாரத்தை யாதாயினும் ஒரு நாட்டிற்கு மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தால் கட்டாயம் அத்தனிப்பட்ட நாடு தான் சார்ந்த நாடுகளுக்கு சார்பாக செயற்படுவதுடன் தனக்கு எதிராக உள்ள அல்லது தனக்கு போட்டியாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு சாதகமான தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரிக்கும்.
இதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்காக்கு மாத்திரம் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டிருக்குமெனில் இந்தியா சீனாவிற்கு எதிராக யாதயினும் ஒரு தீர்மானத்தினை ஐ.நாவில் கொண்டு வரும் போது அதனை அமெரிக்கா ஏற்று வாக்களிக்கும். ஏனெனில் அமெரிக்கா இந்தியா சார்பாக செயற்படும் ஒரு நாடாகும். அத்தோடு சீனா தனக்கெதிராக வல்லரசுத்தன்மையை நெருங்கி வருவதும் அமெரிக்காவிற்கு தடங்களாகும். எனவே இவ் அதிகாரம் 5 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளமையினால் அமைப்பில் உள்ள 5 நாடுகளும் ஒரு பாதகமான தீர்ப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பது சாத்தியமற்ற விடயமாகும். இவ்வாறு நாடுகள் முரண்பட்டுக்கொள்ளாமல் நாடுகள் அமைதியாகவும் சமாதானமாகவும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள இது காரணமாய் அமைந்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகளை ஒன்றுபடுத்துவதில் ஐ.நாவின் பாதுகாப்புசபை சபை பெரும் பங்களிக்கின்றது. செப்டம்பர் 11ம் திகதி 2001 அமெரிக்காவின் மீதான தாக்குதலின் போது 50ற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்தும் வந்து பல்வேறு சமயக்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் தங்கியிருந்த இடமே தாக்குதலுக்குள்ளான உலகவர்த்தக மையமாகும் எனவும் அதற்காக சகல மனிதவர்க்கமும் இத்தாக்குதலுக்கு பின்னனியில் இருந்த சக்தியை தோற்கடிக்க ஒன்று கூட வேண்டும் என்ற அடிப்படையில் ஐ.நா உலகளாவியல் கூட்டு முயற்சியை கட்டியெழுப்பியது.  பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை நாடுகடத்தல் அவர்களை விசாரணைக்குட்படுத்தல், கட்டாய நிதி சேகரிப்பை ஒழித்தல் போன்றவை உட்பட பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சகல நாடுகளையும் ஒன்று படுத்தியது.

அதே போல் உலக நாடுகளில் ஒருசில சிறிய நாடுகளைத்தவிர வல்லரசுகள் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இதன் அங்கத்துவத்தினை கொண்டிருப்பதினால் உறுப்பு நாடுகளின் அனைத்துவகையான பிரச்சினைகளும் இச்சபையில் ஆராய்ந்து தீர்மானங்கள் வழங்கி வருவதோடு வருமையான நாடுகளுக்கு பண உதவியும் மனிதாபிமானமற்ற முறையில் போர்கள் வெடிக்க ஆரம்பிக்கும் போது அவற்றை அமைதியான முறையில் தடுத்து முன்னர் கூறியது போல் வெவ்வேறு நாடுகளின் படைகள் இன்னொரு நாட்டிற்குள் இருக்குமெனில் அவற்றை திரும்பப் பெறுமாறு அழுத்தம் தெரிவித்து சாதாரணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒன்றாக பாதுகாப்புச்சபை விளங்குகிறது.  

மேலும் 1966ல் இப்போது சிம்பாபே என அழைக்கப்படும் தெற்கு ரொடீசிய சிறுபான்மை வெள்ளை அரசின் மீது பொருளாதாரத்தடையை நடைமுறைப்படுத்தியமை, 1977ல் பாதுகாப்புச்சபை தென்னாபிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கையை கண்டிக்கும் வகையில் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக ஆயுதத்தடையை விதித்தமை, 1990ல் குவைத் மீது ஈராக் படையெடுத்த போது பாதுகாப்புச்சபை ஈராக் மீது ஆகாய, தரை வழித் தாக்குதல்களை தொடுத்ததன் மூலமாக குவைத்தை விட்டு ஈராக்கை வெளியேற்றி குவைத் நாட்டிற்கு மேலாண்மையினை பெற்றுக் கொடுத்தமை, கம்போடியா, எல் சால்வேடர், கௌட்டாமேலா, மொசாம்பிக் ஆகிய நாடுகளின் உள்நாட்டுப் போர்களை முடிவுக்கு கொண்டுவந்தமை, 1947ல் டச்சு நாட்டின் பிடியிலிருந்து இந்தோனேசியாவுக்கு விடுதலை வாங்கி கொடுத்தமை, 1962 மற்றும் 1973ல் எழுந்த, மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சனை மற்றும் 3ஆம் உலக யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முனைந்த கியூபா ஏவுகணைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தமை போன்றன உலக சமாதானத்தை பேணும் வகையில் ஐ.நா பாதுகப்புச்சபையினால் மேற்கொள்ளப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும்.

அணு ஆயுதங்களுக்கு எதிரான பல நிலைப்பாடுகளை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளும்படி செய்வதில் பாதுகாப்பு சபை பல அழுத்தங்களை தெரிவித்து வருகின்றது. கடந்த வருடம் (2016) ஜனவரி மாதம் ஈரான் அணு ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கி-மூன் கருத்து தெரிவிக்கும் போது இவ் ஒப்பந்தம் வரலாற்றில் ஒரு மைல் கல் என்று பாராட்டியிருந்தார். இதன் மூலம் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அணு சக்தி முகாமையின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டமையினால் ஈரானுக்கு சர்வதேச ரீதியாக இருந்த தடைகளும் நீக்கப்பட்டன.

ஈரானுடனான இவ் அணு ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடாத்தப்படும் போது E 3+3 நாடுகள் அதாவது பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இருந்தமையால் இந்த ஒப்பந்தம் மிகச்சிறந்த பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அமைதி, பாதுகாப்பு, மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்தும் எனவும் பிராந்தியத்திற்கு அப்பாலும் இந்த ஸ்திரத்தன்மை நிலவும் எனும் நம்பிக்கை எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி ஈரான் மேற்கொள்ளும் அணு திட்ட விவரங்களை சர்வதேச அணு சக்தி ஏஜென்சி மேற்பார்வையிடும். அத்தோடு ஈரான் பிடித்து வைத்திருந்த அமெரிக்கர்களும் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவோர் விடயமாகும்.

மேலும் பாதுகாப்புச்சபை இரு நாடுகள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்து வைக்கின்றது என்ப
தற்கு சிறந்த உதாரணம் 1988ல் ஏற்பட்ட ஈரான் – ஈராக் போரை முடிவுக்குக் கொண்டு வந்தமையாகும். அதே போல் காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் எனும் தீர்மானத்தினை பாதுகாப்பு சபைய கொண்டுவந்தது. இந்த விவகாரத்துக்கு இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் ஆதரவாக வாக்களித்து புதிய முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் மீது 2016 செப்டம்பர் 09 ஆம் திகதி இடம்பெற்ற பங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு இப்பாதுகாப்புச்சபை கண்டனம் தெரிவித்து வந்ததுடன் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், மேற்கொண்டு இதுபோன்ற உயிரிழப்புகள் நேராத வகையில் அங்கு நிரந்தரத்தன்மையை பாதுக்காக முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. மேலும் பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் தீவிறவாத செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பல்வேறு ஆயத்த நடவடிக்கைகளை ஐ.நா மேற்கொண்டு வருவதுடன் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் ஐ.நா வின் பாதுகாப்புப் படையினை நிறுத்தி வைத்துள்ளது.


அண்மைக்காலங்களாக ஆசிய பிராந்தியத்தில் நிலவி வரும் அணு ஆயுத பரிசோதனையானது உலக சமாதானம் பாதுகாப்பினை அச்சுறுத்தும் நிகழ்வாக காணப்படுவதுடன் மூன்றாம் உலக யுத்தம் ஒன்று ஆரம்பித்து விடுமோ என்ற அச்சுறுத்தலில் உலக நாடுகள் உள்ளன. ஆண்டாண்டு காலமாக தென் கொரியா மற்றும் வட கொரியாவிற்கு இடையில் இருந்து வரும் முரண்பாட்டு நிலைமையானது இவ்விரு நாடுகளும் மாரி மாரி அணுஆயுத பரிசோதனையின் மூலம் தமது பலத்தினை வெளிப்படுத்தி வருகின்றன. இது ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை மாத்திரம் அன்றி உலக சர்வதேச அரங்கில் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு ஆரம்பத்திலேயே வட கொரியாவின் மீது ஐ.நா வின் பாதுகாப்புக் சபையி பல்வேறு தடைகளை விதித்து அந்நாடை தனிமைப் படுத்தி வந்திருந்தது. அதனையும் மீறி இந்த ஆண்டு (2017) மாத்திரம் வடகொரியா 20 ற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை பரிசோதித்துள்ளது. அத்துடன் இவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளாகவும் காணப்பட்டன. வடகொரியாவின் இப்போக்கினை நிறுத்துவதற்கு இவ்வாண்டு (2017) ஆகஸ்ட் 6ஆம் திகதி மீண்டும் ஐ.நாவின் பாதுகாப்புச்சபை வட கொரியாவின் ஏற்றுமதி மீது தடை, அந்நாட்டில் செய்யப்படும் முதலீடுகளை கட்டுப்படுத்துவது போன்ற தடைகளை விதிக்கின்ற தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. கடந்த காலங்களில் வட கொரியாவுக்கு தீங்கு விளைவிக்கும் தீர்மானங்களில் இருந்து சீனா வட கொரியாவை காப்பாற்றி வந்தது ஆனால் இம் முறை வட கொரியா மீதான தடைகளுக்கு சீனா ஆதரவாக வாக்களித்திருந்தது.

நிலக்கரி, தாதுப் பொருட்கள் மற்றும் கச்சா பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது வட கொரியாவின் வருமானத்திற்கு ஒரு வழியாக இருந்து வந்தது. ஒவ்வோர் ஆண்டும் 3 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை வட கொரியா ஏற்றுமதி செய்து வந்தது. இந்த தடைகளால் ஒரு பில்லியன் வர்த்தகம் தடைப்பட வாய்ப்புள்ளதாகவும்  மதிப்பிடப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக வட கொரியாவின் பொருளாதாரத்தில் மந்தநிலையை ஏற்படுத்தி ஏவுகனை பரிசோதனைக்கான பொருளாதார வலிமையை இல்லாதொழிப்பதே ஐ. நாவின் பாதுகாப்பு சபையின் நோக்கமாகும். அதே சமயம் இச்சபை வட கொரிய மக்களின் வறுமை நிலை தொடர்பாகவும் ஆராய்ந்து அம்மக்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானங்களை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றது. 
இவ்வாறு உலகின் சமாதானம் மற்றும் பாதுகாப்பினை பேணிவருவதன் பொருட்டு ஐ. நாவின் பாதுகாப்புச்சபை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை இன்றுவரை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் இன்று பல நாடுகள் இப்பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவம் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உருப்பினர் ஆவதற்கு பெரும் பாடு படுகின்றன. ஆனால், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஜெர்மனிக்குப் பதிலாக பொதுவன ஒரு ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு இந்த இடத்தை வழங்கலாம் என விருப்பம் தெரிவித்தன. மேலும் இன்றுள்ள உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கும் இச்சபையில் நிரந்தர உருப்புரிமை கோரி வரப்படுகின்றது.
முன்னால் ஐ.நா. பொதுச் செயலாளராக இருந்த திரு.கோபி அன்னானும் இந்த நிரந்தர உருப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு ஒரு குழுவை பரிசீலிக்கச் கூறி அந்த குழு இந்த எண்ணிக்கையில் இன்னும் ஐந்து நாடுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று ஜப்பான், ஜெர்மனி, இந்தியா, பிரேசில் மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து ஒரு முக்கியமான நாடு என சிபாரிசு செய்தது. செப்டம்பர் 21, 2004ல் இந்த நாடுகள் கூட்டாக மற்ற நாடுகளை ஆதரிப்பதாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதை பிரான்சு மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஆதரிப்பதாகவும் கூரியது. ஆனால் இன்றுவரை நிரந்தர உருப்புரிமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
எது எவ்வாறாயினும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் முக்கியத்துவமானது ஏழு தசாப்த காலத்திற்கு மேலாக உலகைப் 3ஆவது ஒரு உலகப்போர் ஒன்று ஏற்பட்டு அழிந்துவிடாமல் நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வந்ததில் இருந்து வெளிப்படுத்தப்படுகின்றது. அத்தோடு 2ம் உலகப்போருக்கு பின் உலக வரலாற்றில் இதுவரை நிறுவப்பட்ட அமைப்புக்களில் மிகப் பெரிய தாபனம் ஐ.நா காணப்படுகின்றது. இதுபல தடைகளைத் தாண்டி வளர்ந்து, இயலுமானவரை நற்பணி செய்து உலகில் அமைதி காத்து வந்துள்ளது. அரசியல் சிக்கல்களை தீர்ப்பதில் முழு வெற்றியடையாத போதிலும் அன்று இருபெரும் வல்லரசுகளுக்கிடையே உள்ள பகைமை உணர்வை பாதுகாப்புச் சபையின் வீட்டோ அதிகாரத்தின் வாயிலாக ஓரளவேனும் தடுத்து வைத்திருப்பதற்கு உதவியுள்ளதுடன் இன்றைய பல்துருவ நிலைமையில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் வல்லரசு போட்டியில் யுத்தம் ஒன்று ஏற்பட்டு விடாமல் பாதுகாத்து வருகின்றது. இந்த வீட்டோ அதிகாரத்தை சீனா 5 முறையும், பிரான்சு 18 முறையும், ரஷ்யா 122 முறையும், பிரித்தானியா 32 முறையும், அமெரிக்கா 79 முறையும் பயன்படுத்தி இருக்கின்றது.

வருங்காலத் தலைமுறையினருக்கு அமைதியான, பாதுகாப்பான உலகை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பிற நிர்வாக அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப்போருக்கு பின் இன்றுவரை உலக சமாதனத்திற்கும் மனித வர்கத்தின் கூட்டு மொத்தத்திற்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஐ.நா சபை உள்ளது. நாடுகளுக்கிடையிலான உறவுகளையும் பாதுகப்பினையும் அச்சுருத்தும் இன்றைய உலகில் மேலும் மேலும் அரசாங்கங்களும் மக்களும் அதேபோன்ற நம்பிக்கைகளுடன் ஐ.நா வை அணுகிவருகின்றன. இதற்காகவே பூமியில் மிகவும் கௌரவம் வாய்ந்த பரிசான சமாதானத்திற்கான நோபல் பரிசை இதற்கு வழங்கி ஐக்கிய நாடுகள் சபையின் சேவைகளை உலகம் மீண்டும் மீண்டும் அங்கீகரித்துவருவதை எடுத்துக்காட்டுகிறது.


Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science 
University of Peradeniya

Security council of United Nations

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை

ஐக்கிய நாடுகள் அல்லது ஐ.நா சபை ஆங்கிலத்தில் United nations எனப்படுவது உலகின் 193 நாடுகளை அங்கத்த்உவமாக கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இது வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் நியூயோர்க்கில் உள்ளது.  இதன் அங்கத்துவமானது திறந்து விடப்பட்டுள்ளது. சமாதானத்தினை விரும்பும் அணைத்து நாடுகளும் இதில் அங்கம் வகிக்கலாம். இதில் அங்கத்துவம் பெற விரும்பும் நாடுகளை பாதுகாப்பு சபையின் பர்ந்துரையின் கீழ் பொதுச்சபை அனுமதி பற்றிய தீர்மானத்தினை எடுக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களாக :

  • கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்
  • பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.
  • மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்
  • மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.
  • உறுப்பினர்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கள்
  • உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
  • உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.

போன்றவை காணப்பட்டன. மேலும் இச்சபையானாது 6 கட்டமைப்புக்களை கொண்டுள்ளது. அவையாவன :
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
  • ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
  • ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்
  • ஐக்கிய நாடுகள் செயலகம்
  • அனைத்துலக நீதிமன்றம் 

போன்றவையாகும். இதில் உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பினை பேணும் பாரிய பொறுப்பு பாதுகாப்புச்சபைக்கு உள்ளது. பாதுகாப்புச்சபை பற்றி ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் 5வது அத்தியாயத்தில் 23 வது உறுப்புரையில் குறிப்பிட்டுள்ளதன் படி பாதுகாப்புச்சபை ஐக்கிய நாடுகளின் பதினைந்து அங்கத்தவர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். சீனக் குடியரசு, பிரான்ஸ், ரஷ்யா, பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்பன பாதுகாப்புச்சபையின் நிரந்தர அங்கத்துவர்களாவர். சர்வதேச சமாதானத்தையும் பாதுகப்பினையும் பேணுதல் மீதும் ஒழுங்கமைப்பின் வேறு நோக்கங்கள் மீதும், ஐக்கிய நாடுகளின் அங்கத்தவர்களின் பங்களிப்பு பற்றி முதலில் விசேடமாகக் கவனஞ் செலுத்தி, உலகத்தில் பற்பல பிரதேசங்கள் பிரதிநிதித்துவப்படும் விதத்தில், பாதுகாப்புச் சபையின் நிரந்தரமல்லாத அங்கத்தவர்களாக ஐக்கிய நாடுகளின் வேறு பத்து நாடுகளை பொதுப் பேரவை தெரிவுசெய்தல் வேண்டும்.

ஐக்கிய நாடுகள் கொடி
பாதுகாப்புச்சபையின் நிரந்தரமல்லாத அங்கத்தவர்கள் இரண்டு வரட காலப்பகுதிக்குத் தெரிவு செய்யப்படுவர். பாதுகாப்புச்சபை அங்கத்தவர் தொகை 11 இல் இருந்து 15 ஆக அதிகரிக்கப்பட்டதன் பின்னர் வரும் முதலாவது தெரிவில் அம்மேலதிக அங்கத்தவர் நால்வரின் இருவர் ஒரு வருடகாலப் பகுதிக்குத் தெரிவு செய்யப்படுவர். இளைப்பாறும் அங்கத்தவர் ஒருவர் உடனடியாக மீளத் தெரிவு செய்யப்படுவதற்குத் தகைமையுடையவராகார். பாதுகாப்புச் சபையின் ஒவ்வோர் அங்கத்தவரும் ஒரு பிரதிநிதியைக் கொண்டிருத்தல் வேண்டும்.

மேலும் பாதுகாப்புச்சபையின் பணிகளும் தத்துவங்களும் உறுப்புரை 24 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதன் படி ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் உரிய நேரத்தில் திறம்பட நிறைவேற்றப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக அதன் அங்கத்துவ நாடுகள் சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பினையும் பேணும் அடிப்படைப் பொறுப்பினை பாதுகாப்புச் சபையிடம் ஒப்படைத்துள்ளனர். அவ்வாறே இப் பொறுப்பின் கீழ் தமது கடமைகளை நிறைவேற்றுகையில் பாதுகாப்புச் சபை செயற்படுவது அவர்களுக்காகவென்பதை ஏற்றுக் கொள்வதற்கு அவ் அங்கத்துவ நாடுகள் உடன்படுகின்றன.
இக்கடமைகளை நிறைவேற்றுகையில் பாதுகாப்புச் சபை ஐக்கிய நாடுகளின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் இணங்கச் செயற்பட வேண்டும். இக்கடமைகளை நிறைவேற்றுவதற்காக பெற்றுள்ள குறிப்பிட்ட தத்துவங்கள் 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம் அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுப் பேரவையின் ஆலோசனைக்கு உட்படுத்துவதற்காக பாதுகாப்புச் சபையானது அதன் வருடாந்த அறிக்கைகளையும் சமர்ப்பித்தல் வேண்டும்.


ஐக்கிய நாடுகள் சின்னம்
உறுப்புரை 25 இன் படி இப்பட்டயத்திற்கு இணங்க பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை கொண்டு நடாத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் உடன்பட வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளது. மேலும் உறுப்புரை 26ல் உலகத்தின் மனித மற்றும் பொருளாதார மூலவளங்களை முடிந்தளவில் யுத்த உபகரணங்கள் ஆக்கத்திற்காக குறைவாக ஈடுபடுத்தி சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பினையும் தாபித்தலையும் பேணுதலையும் ஊக்குவிப்பதற்காக 47ஆம் உறுப்புரையில் குறிப்பீடு செய்யப்பட்ட இராணுவப் பணியாட்டொகுதிக்கு குழுவின் உதவியுடன் யுத்த உபகரணங்களை ஒழுங்குபடுத்தும் முறைமையொன்றைத் தாபிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அங்கத்தவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய திட்டங்கள் தயாரிப்பதும் பாதுகாப்புச் சபையின் பொறுப்பாதல் வேண்டும். இத்தகைய பொறுப்புக்களைக் கொண்ட பாதுகாப்புச் சபை உலகின் சமாதனம் மற்றும் பாதுகாப்பினைப்பேண எத்தகைய வகிபங்கினை வகித்துள்ளது என்பது தொடர்பாக இனி ஆராய்வோம். 

Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science 

University of Peradeniya

International Peace and Security

சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு

சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகப்பு எனப்படுவது அரசுகளாலும் சர்வதேச நிறுவனங்களாலும் பரஸ்பர தங்குநிலையையும் பாதுகாப்பினையும் உறுதி செய்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளேயாகும். இந் நடவடிக்கைகளுல் இராணு நடவடிகைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மாநாடுகள் போன்ற இராஜதந்திர ஒப்பந்தங்கள் என்பன உள்ளடங்கும். சர்வதேச பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பும் நெருங்கிய தொடர்பினை கொண்டதாகும். அதாவது சர்வதேச பாதுகாப்பு என்பது உலக அரங்கில் தேசங்களின் அல்லது மாநிலங்களின் பாதுகாப்பேயாகும். இரண்டாம் உலகமகா யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து, சர்வதேச பாதுகாப்பு எனும் புதிய பாடப்பரப்பு கற்கைநெறிக்குள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. இது சர்வதேச உறவுகளின் ஒரு துணைத்துறையாக கற்பிக்கப்பட்டு வந்ததுடன் இன்று ஒரு தனியான கற்கைத்துறையாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. 1950 ஆகும் போது சர்வதேச பாதுகாப்பு எனும் பாடப்பரப்பு, சர்வதேச உறவு கற்கை நெறியின் மையப்புள்ளியாக கருதப்பட்டது. இதன் முக்கிய கூறுகளாக பாதுகாப்பு ஆய்வுகள், இராஜதந்திர ஆய்வுகள் மற்றும் சமாதான ஆய்வுகள் போன்றவை காணப்பட்டன. 

பொதுவாக “பாதுகாப்பு” அல்லது “சமாதானம்” என்பதன் பொருளானது வரையறுக்கப்படாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. சர்வதேச பாதுகாப்பு பாடப்பரப்பின் உள்ளடக்கமானது பல வருடங்களுக்கு முன்னமே விரிவடைந்துள்ளது. இன்று இதனுள் உலக இருப்பினை பாதிக்கக்கூடிய அதனுடன் தொடர்புபட்ட அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இன்று சர்வதேச பாதுகாப்பு என்பது மரபார்ந்த அல்லது பாரம்பரிய இராணுவ பலத்தினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து வேறுபட்டு, நாடுகளுக்கிடையிலான போர் அல்லது முரண்பாடுகளானது, பொருளாதார வலிமையினால், இன, மத வேறுபாடுகளினால், கருத்தியல் (தாராளவாதம், சோசலிஸம் போன்ற) மோதல்களால், வர்த்தக மற்றும் பொருளாதார முரண்பாடுகள், சக்தி விநியோகத்தால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால், அன்றாட உணவுக்காக மற்றும் சுற்றுப்புறச்சூழலின் சீர்கேட்டால் வரும் அச்சுறுத்தலில் இருந்து மனிதனையும் தேசத்தினையும் பாதுகாக்கும் பொருட்டு, தொற்று நோய்களால், காலநிலை மாற்றம் மற்றும் அரசு சாரா செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் போன்றவற்றினால் சவால்களை எதிர் நோக்கி வருகின்றன.

சர்வதேச பாதுகாப்பின் அவசியம் பற்றி பார்த்தோமானால் இரு பெரும் உலகமகா யுத்தத்திற்குப் பின்னர் இன்னுமோர் பாரிய யுத்தம் ஒன்று வராமல் தடுத்து நிற்பது இவ் சர்வதேச பாதுகாப்பு எனும் உத்தியே ஆகும். இதனை 2ம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் நடமுறையில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பினை பேனி வரும் ஒரு உலகலாவிய நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை காணப்படுகின்றது. இந்நிறுவனம் சர்வதேச பாதுகாப்பு எனும் எண்ணக்கருவின் கீழ் மேற்கொள்ளும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளே இன்று சர்வதேச பாதுகாப்பினை உறுதி செய்து 3ம் உலக யுத்தம் ஒன்று ஏற்படாது தடுத்து ஓரளவிலேனும் அமைதியைப் பேணி வருகின்றது எனக் கூறலாம். இதில் ஓரளவு என்ற சொற்பிரயோகத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுவது என்னவென்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். அதாவது 2ம் உலகமகா யுத்தத்தின் முடிவின் பின்னரும் சர்வதேச பாதுகாப்பினை அச்சுறுத்தக்ககூடிய பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்று வந்ததை நாம் அறிவோம்.

பனிப்போர், கியூப ஏவுகணை நெருக்கடி, கொரிய யுத்தம், வியட்நாம் போர், மும்பைத்தாக்குதல், இந்திய பகிஸ்தான் போர், அமெரிக்க இரட்டைக் கோபுரம் தீவிறவாதிகளால் தாக்குதலுக்குட்பட்டமை, ஈராக் குவைட் யுத்தம் போன்ற பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்கு உலகம் முகங்கொடுத்து வந்ததுடன் இவை 3வது உலக யுத்தத்திற்கான ஓர் எதிர்வுகூறல்களாக அமைந்த விடயங்களாகவும் காணப்பட்டன. இத்தகைய காரணங்களினால் இன்றைய உலகில் சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை பேணி வரும் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையே மிக முன்னிலையில் காணப்படுகின்றது. அதனால் நாம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை சர்வதேச சமாதனத்தையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதில் எத்தகைய வகிபங்கினை வகிக்கின்றது எனப்பார்ப்போம்.  தொடரும்..... (http://focusoffox.blogspot.com/2017/09/security-council-of-united-nations.html)


Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science 
University of Peradeniya

NATO

நேட்டோவின் தோற்றம் மற்றும் வளர்ச்சி   நேட்டோ அரசு சார் பிராந்திய அமைப்பாகும் . 4 ஏப்ரல் 1949 ஆம் ஆண்டு இரு வட அமெரிக்க மற்றும...