சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பை பேணுவதில் பாதுகப்புச்சபை
உலக
சமாதனம், மக்களின் உரிமை, நாடுகளுக்கிடையிலான நல்லுறவு, நாடுகளுக்கிடையிலான சமூக, பொருளாதார
ஒத்துழைப்பு, சமூக அபிவிருத்தி என்பவற்றை நோக்கங்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச
தொடர்புகளை பேணுவதிலும் உலகம் பூராகவும் அமைதியை பேணுவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றது.
போர்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், படைக்கலம் ஒழிப்பு, பொருளாதார
சமூக முன்னேற்றம், சர்வதேச அபிவிருத்தி, மனித உரிமை நடவடிக்கை, குடியேற்ற ஆதிக்கத்தை
அகற்றுதல் என பல்வேறு செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய
பாரிய பொறுப்புக்களை நிறைவேற்றும் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை காணப்படுகின்றது.
அந்தவகையில்
ஐ.நா சபை சர்வதேச அமைதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சர்வதேச தொடர்புகள்
ஊடாக இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகள் பல வெற்றியளித்துள்ளன. 1946ல் ஈரான் நாட்டின் வட
எல்லையிலிருந்து ரஷ்யப்படைகளை விலகச்செய்தமை சிரியாவில் இருந்தும் லெபனானில் இருந்தும்
பிரிட்டிஷ்-பிரன்சுப்படைகளை விலகச்செய்தமை, 1988ல் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப்படைகளைத்
திரும்ப பெற செய்தமை. கிரேக்க நாட்டின் எல்லைகளில் பொதுவுடமை ஆதிக்கம் பரவாமல் தடுத்தமை
போன்ற நடவடிக்கைகள் ஐ. நாவிற்கு வெற்றி ஈட்டிக்கொடுத்தன. 1991 ஆம் ஆண்டில் யுகொஸ்லாவாக்கியா
மீது ஆயுதத்தடையை விதித்து அமைதி நிலைப்பாட்டை ஏற்படுத்தியமை, 1992ல் லிபியாவிற்கு
எதிராக ஏற்றுமதிதடையை விதித்தமை, 2002ம் ஆண்டு இந்தோனேசியாவின் பிடியில் இருந்து கிழக்குத்
தீமோரையும் 2007ல் சேர்பியாவின் பிடியிலிருந்து கொசோவாவையும் சுதந்திர நாடுகளாக அங்கிகரித்தமை,
1956ல் சூயஸ்கால்வாய் பிரச்சனையை முடிவுக்குக் கொணர்ந்து அதை அனைத்து நாடுகளின் பயன்பாட்டிற்குப்
பொதுவாக்கியமை போன்ற செயற்பாடுகள் உலக சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஐ.நா வின்
பாதுகாப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
ஐக்கிய
நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபையில் உள்ள வீட்டோ அதிகாரத்தை தனி ஒரு நாட்டிற்கு மாத்திரம்
வழங்காமல் 5 நாடுகளுக்கு வழங்கியுள்ளமை என்பதும் ஒரு வகையில் நல்லதற்கு என்றே கூறலாம்.
ஏனெனில் இவ் வீட்டோ அதிகாரத்தை யாதாயினும் ஒரு நாட்டிற்கு மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தால்
கட்டாயம் அத்தனிப்பட்ட நாடு தான் சார்ந்த நாடுகளுக்கு சார்பாக செயற்படுவதுடன் தனக்கு
எதிராக உள்ள அல்லது தனக்கு போட்டியாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு சாதகமான தீர்மானங்களை
வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரிக்கும்.
இதற்கு
சிறந்த உதாரணம் அமெரிக்காக்கு மாத்திரம் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டிருக்குமெனில்
இந்தியா சீனாவிற்கு எதிராக யாதயினும் ஒரு தீர்மானத்தினை ஐ.நாவில் கொண்டு வரும் போது
அதனை அமெரிக்கா ஏற்று வாக்களிக்கும். ஏனெனில் அமெரிக்கா இந்தியா சார்பாக செயற்படும்
ஒரு நாடாகும். அத்தோடு சீனா தனக்கெதிராக வல்லரசுத்தன்மையை நெருங்கி வருவதும் அமெரிக்காவிற்கு
தடங்களாகும். எனவே இவ் அதிகாரம் 5 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளமையினால் அமைப்பில் உள்ள
5 நாடுகளும் ஒரு பாதகமான தீர்ப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பது சாத்தியமற்ற விடயமாகும்.
இவ்வாறு நாடுகள் முரண்பட்டுக்கொள்ளாமல் நாடுகள் அமைதியாகவும் சமாதானமாகவும் தமது நடவடிக்கைகளை
மேற்கொள்ள இது காரணமாய் அமைந்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு
எதிராக உலக நாடுகளை ஒன்றுபடுத்துவதில் ஐ.நாவின் பாதுகாப்புசபை சபை பெரும் பங்களிக்கின்றது.
செப்டம்பர் 11ம் திகதி 2001 அமெரிக்காவின் மீதான தாக்குதலின் போது 50ற்கு மேற்பட்ட
நாடுகளிலிருந்தும் வந்து பல்வேறு சமயக்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் தங்கியிருந்த
இடமே தாக்குதலுக்குள்ளான உலகவர்த்தக மையமாகும் எனவும் அதற்காக சகல மனிதவர்க்கமும் இத்தாக்குதலுக்கு
பின்னனியில் இருந்த சக்தியை தோற்கடிக்க ஒன்று கூட வேண்டும் என்ற அடிப்படையில் ஐ.நா
உலகளாவியல் கூட்டு முயற்சியை கட்டியெழுப்பியது.
பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை நாடுகடத்தல் அவர்களை விசாரணைக்குட்படுத்தல், கட்டாய
நிதி சேகரிப்பை ஒழித்தல் போன்றவை உட்பட பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சகல நாடுகளையும்
ஒன்று படுத்தியது.
அதே
போல் உலக நாடுகளில் ஒருசில சிறிய நாடுகளைத்தவிர வல்லரசுகள் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள்
இதன் அங்கத்துவத்தினை கொண்டிருப்பதினால் உறுப்பு நாடுகளின் அனைத்துவகையான பிரச்சினைகளும்
இச்சபையில் ஆராய்ந்து தீர்மானங்கள் வழங்கி வருவதோடு வருமையான நாடுகளுக்கு பண உதவியும்
மனிதாபிமானமற்ற முறையில் போர்கள் வெடிக்க ஆரம்பிக்கும் போது அவற்றை அமைதியான முறையில்
தடுத்து முன்னர் கூறியது போல் வெவ்வேறு நாடுகளின் படைகள் இன்னொரு நாட்டிற்குள் இருக்குமெனில்
அவற்றை திரும்பப் பெறுமாறு அழுத்தம் தெரிவித்து சாதாரணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்
ஒன்றாக பாதுகாப்புச்சபை விளங்குகிறது.
அணு ஆயுதங்களுக்கு எதிரான
பல நிலைப்பாடுகளை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளும்படி செய்வதில் பாதுகாப்பு சபை பல
அழுத்தங்களை தெரிவித்து வருகின்றது. கடந்த வருடம் (2016) ஜனவரி மாதம் ஈரான் அணு ஒப்பந்தம்
தொடர்பாக ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கி-மூன் கருத்து தெரிவிக்கும் போது இவ் ஒப்பந்தம்
வரலாற்றில் ஒரு மைல் கல் என்று பாராட்டியிருந்தார். இதன் மூலம் அமைதி, பாதுகாப்பு மற்றும்
ஸ்திரத்தன்மை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அணு சக்தி முகாமையின் விதிமுறைகளை
ஏற்றுக் கொண்டமையினால் ஈரானுக்கு சர்வதேச ரீதியாக இருந்த தடைகளும் நீக்கப்பட்டன.
ஈரானுடனான இவ் அணு ஒப்பந்தம்
குறித்து பேச்சு வார்த்தை நடாத்தப்படும் போது E 3+3 நாடுகள் அதாவது பிரான்ஸ், ஜெர்மனி,
பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இருந்தமையால் இந்த ஒப்பந்தம்
மிகச்சிறந்த பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அமைதி, பாதுகாப்பு, மற்றும் ஸ்திரத்தன்மையை
உறுதிபடுத்தும் எனவும் பிராந்தியத்திற்கு அப்பாலும் இந்த ஸ்திரத்தன்மை நிலவும் எனும்
நம்பிக்கை எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி ஈரான் மேற்கொள்ளும்
அணு திட்ட விவரங்களை சர்வதேச அணு சக்தி ஏஜென்சி மேற்பார்வையிடும். அத்தோடு ஈரான் பிடித்து
வைத்திருந்த அமெரிக்கர்களும் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவோர் விடயமாகும்.
மேலும் பாதுகாப்புச்சபை
இரு நாடுகள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளை சுமூகமான
முறையில் தீர்து வைக்கின்றது என்ப
தற்கு சிறந்த உதாரணம் 1988ல் ஏற்பட்ட ஈரான் – ஈராக்
போரை முடிவுக்குக் கொண்டு வந்தமையாகும். அதே போல் காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்
குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் எனும் தீர்மானத்தினை பாதுகாப்பு சபைய கொண்டுவந்தது.
இந்த விவகாரத்துக்கு இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பிரிக்ஸ்
நாடுகள் அனைத்தும் ஆதரவாக வாக்களித்து புதிய முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய
ராணுவ தலைமையகம் மீது 2016 செப்டம்பர் 09 ஆம் திகதி இடம்பெற்ற பங்கரவாதிகளின் கொடூர
தாக்குதலுக்கு இப்பாதுகாப்புச்சபை கண்டனம் தெரிவித்து வந்ததுடன் இந்த தாக்குதலுக்கு
காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், மேற்கொண்டு
இதுபோன்ற உயிரிழப்புகள் நேராத வகையில் அங்கு நிரந்தரத்தன்மையை பாதுக்காக முன்னுரிமை
அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. மேலும் பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் தீவிறவாத
செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பல்வேறு ஆயத்த நடவடிக்கைகளை ஐ.நா மேற்கொண்டு
வருவதுடன் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் ஐ.நா வின் பாதுகாப்புப் படையினை நிறுத்தி வைத்துள்ளது.
அண்மைக்காலங்களாக ஆசிய
பிராந்தியத்தில் நிலவி வரும் அணு ஆயுத பரிசோதனையானது உலக சமாதானம் பாதுகாப்பினை அச்சுறுத்தும்
நிகழ்வாக காணப்படுவதுடன் மூன்றாம் உலக யுத்தம் ஒன்று ஆரம்பித்து விடுமோ என்ற அச்சுறுத்தலில்
உலக நாடுகள் உள்ளன. ஆண்டாண்டு காலமாக தென் கொரியா மற்றும் வட கொரியாவிற்கு இடையில்
இருந்து வரும் முரண்பாட்டு நிலைமையானது இவ்விரு நாடுகளும் மாரி மாரி அணுஆயுத பரிசோதனையின்
மூலம் தமது பலத்தினை வெளிப்படுத்தி வருகின்றன. இது ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய
நாடுகளை மாத்திரம் அன்றி உலக சர்வதேச அரங்கில் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும்
ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு ஆரம்பத்திலேயே வட கொரியாவின் மீது ஐ.நா வின் பாதுகாப்புக்
சபையி பல்வேறு தடைகளை விதித்து அந்நாடை தனிமைப் படுத்தி வந்திருந்தது. அதனையும் மீறி
இந்த ஆண்டு (2017) மாத்திரம் வடகொரியா 20 ற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை பரிசோதித்துள்ளது.
அத்துடன் இவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளாகவும் காணப்பட்டன. வடகொரியாவின்
இப்போக்கினை நிறுத்துவதற்கு இவ்வாண்டு (2017) ஆகஸ்ட் 6ஆம் திகதி மீண்டும் ஐ.நாவின்
பாதுகாப்புச்சபை வட கொரியாவின்
ஏற்றுமதி மீது தடை, அந்நாட்டில் செய்யப்படும் முதலீடுகளை கட்டுப்படுத்துவது போன்ற தடைகளை
விதிக்கின்ற தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. கடந்த காலங்களில் வட கொரியாவுக்கு தீங்கு விளைவிக்கும்
தீர்மானங்களில் இருந்து சீனா வட கொரியாவை காப்பாற்றி வந்தது ஆனால் இம் முறை வட கொரியா
மீதான தடைகளுக்கு சீனா ஆதரவாக வாக்களித்திருந்தது.
நிலக்கரி, தாதுப் பொருட்கள் மற்றும் கச்சா பொருட்களை
சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது வட கொரியாவின் வருமானத்திற்கு ஒரு வழியாக இருந்து
வந்தது. ஒவ்வோர் ஆண்டும் 3 பில்லியன் மதிப்புள்ள
பொருட்களை வட கொரியா ஏற்றுமதி செய்து வந்தது. இந்த தடைகளால் ஒரு பில்லியன்
வர்த்தகம் தடைப்பட வாய்ப்புள்ளதாகவும்
மதிப்பிடப்பட்டது. இவ்வாறான
செயற்பாடுகள் மூலமாக வட கொரியாவின் பொருளாதாரத்தில் மந்தநிலையை ஏற்படுத்தி ஏவுகனை
பரிசோதனைக்கான பொருளாதார வலிமையை இல்லாதொழிப்பதே ஐ. நாவின் பாதுகாப்பு சபையின்
நோக்கமாகும். அதே சமயம் இச்சபை வட கொரிய மக்களின் வறுமை நிலை தொடர்பாகவும்
ஆராய்ந்து அம்மக்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானங்களை மேற்கொள்ள
முயற்சித்து வருகின்றது.
இவ்வாறு உலகின் சமாதானம்
மற்றும் பாதுகாப்பினை பேணிவருவதன் பொருட்டு ஐ. நாவின் பாதுகாப்புச்சபை தொடர்ந்து
பல்வேறு நடவடிக்கைகளை இன்றுவரை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இதன்
முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் இன்று பல நாடுகள் இப்பாதுகாப்பு சபையில்
நிரந்தர அங்கத்துவம் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஜப்பான் மற்றும் ஜெர்மனி
ஆகிய நாடுகள் நிரந்தர உருப்பினர் ஆவதற்கு பெரும் பாடு படுகின்றன. ஆனால், இத்தாலி மற்றும்
நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஜெர்மனிக்குப் பதிலாக பொதுவன ஒரு ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு
இந்த இடத்தை வழங்கலாம் என விருப்பம் தெரிவித்தன. மேலும் இன்றுள்ள உலகின் இரண்டாவது
பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கும் இச்சபையில் நிரந்தர உருப்புரிமை கோரி வரப்படுகின்றது.
முன்னால் ஐ.நா. பொதுச் செயலாளராக
இருந்த திரு.கோபி அன்னானும் இந்த நிரந்தர உருப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்
பொருட்டு ஒரு குழுவை பரிசீலிக்கச் கூறி அந்த குழு இந்த எண்ணிக்கையில் இன்னும் ஐந்து
நாடுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று ஜப்பான், ஜெர்மனி, இந்தியா, பிரேசில் மற்றும் ஆப்ரிக்காவில்
இருந்து ஒரு முக்கியமான நாடு என சிபாரிசு செய்தது. செப்டம்பர் 21, 2004ல் இந்த நாடுகள்
கூட்டாக மற்ற நாடுகளை ஆதரிப்பதாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதை பிரான்சு
மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஆதரிப்பதாகவும் கூரியது. ஆனால் இன்றுவரை நிரந்தர
உருப்புரிமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
எது எவ்வாறாயினும் ஐ.நா
பாதுகாப்புச் சபையின் முக்கியத்துவமானது ஏழு தசாப்த காலத்திற்கு
மேலாக உலகைப் 3ஆவது ஒரு
உலகப்போர் ஒன்று ஏற்பட்டு அழிந்துவிடாமல் நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளை
சுமூகமாக தீர்த்து வந்ததில் இருந்து வெளிப்படுத்தப்படுகின்றது. அத்தோடு 2ம்
உலகப்போருக்கு பின் உலக வரலாற்றில் இதுவரை நிறுவப்பட்ட அமைப்புக்களில் மிகப் பெரிய
தாபனம் ஐ.நா காணப்படுகின்றது. இதுபல தடைகளைத் தாண்டி வளர்ந்து, இயலுமானவரை நற்பணி செய்து
உலகில் அமைதி காத்து வந்துள்ளது. அரசியல் சிக்கல்களை தீர்ப்பதில் முழு வெற்றியடையாத
போதிலும் அன்று இருபெரும் வல்லரசுகளுக்கிடையே உள்ள பகைமை உணர்வை பாதுகாப்புச் சபையின்
வீட்டோ அதிகாரத்தின் வாயிலாக ஓரளவேனும் தடுத்து வைத்திருப்பதற்கு உதவியுள்ளதுடன்
இன்றைய பல்துருவ நிலைமையில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் வல்லரசு
போட்டியில் யுத்தம் ஒன்று ஏற்பட்டு விடாமல் பாதுகாத்து வருகின்றது. இந்த வீட்டோ அதிகாரத்தை
சீனா 5 முறையும், பிரான்சு 18 முறையும், ரஷ்யா 122 முறையும், பிரித்தானியா 32 முறையும்,
அமெரிக்கா 79 முறையும் பயன்படுத்தி இருக்கின்றது.
வருங்காலத் தலைமுறையினருக்கு அமைதியான, பாதுகாப்பான உலகை
உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பிற நிர்வாக அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு
வருகின்றன. இரண்டாம் உலகப்போருக்கு பின் இன்றுவரை உலக சமாதனத்திற்கும் மனித வர்கத்தின்
கூட்டு மொத்தத்திற்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஐ.நா சபை உள்ளது. நாடுகளுக்கிடையிலான
உறவுகளையும் பாதுகப்பினையும் அச்சுருத்தும் இன்றைய உலகில் மேலும் மேலும் அரசாங்கங்களும்
மக்களும் அதேபோன்ற நம்பிக்கைகளுடன் ஐ.நா வை அணுகிவருகின்றன. இதற்காகவே பூமியில் மிகவும்
கௌரவம் வாய்ந்த பரிசான சமாதானத்திற்கான நோபல் பரிசை இதற்கு வழங்கி ஐக்கிய நாடுகள் சபையின்
சேவைகளை உலகம் மீண்டும் மீண்டும் அங்கீகரித்துவருவதை எடுத்துக்காட்டுகிறது.
Posted by
Thiviya Mihirangani BA (Hons) Political Science
University of Peradeniya
No comments:
Post a Comment